
துபாய், அக்டோபர்-1,துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற flydubai விமானத்தில், நடுவானில் விமானத்தை வீழ்த்த முயன்ற துணை விமானியின் சதியை முறியடித்து, சுமார் 180 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் Smit Machchhar உலகளவில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறார்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அதிலிருந்த துணை விமானி திடீரென கட்டுப்பாட்டு முறைகளைச் சீர்குலைத்து விமானத்தை கீழே மோதச் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது அவரைத் தடுத்து நிறுத்தப் போராடிய தலைமை விமானியான கேப்டன் Smith, அந்தத் துணை விமானியால் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டுப் பலத்த காயமடைந்தார்.
இரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மனம் தளராமல் எதிர்த்துப் போராடிய கேப்டன் ஸ்மித், சமயோசிதமாக Cockpit கதவைத் திறந்து உதவியை அழைத்துள்ளார்.
உடனடியாக விமானப் பணிக்குழுவினரும் சில பயணிகளும் உள்ளே நுழைந்து அந்தத் தாக்குதல் நடத்திய துணை விமானியை மடக்கிப் பிடித்தனர்.
இந்த மோதலின் போது விமானம் மளமளவென 17 ஆயிரம் அடிக்கும் கீழே பாய்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட அந்த போயிங் விமானம், சவூதி அரேபியாவின் Tabuk நகரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
தாக்குதல் நடத்தியவர் சவூதி அதிகாரிகளால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த கேப்டன் Smith அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தேறி வருகிறார்.
இவரது அசாத்திய துணிச்சலைப் பாராட்டியுள்ள இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, _”கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும் எதிர்த்து நின்று, பெரும் வான்வழிப் பேரழிவைத் தடுத்த உண்மையான கதாநாயகன் கேப்டன் Smith”_ என நெகிழ்ச்சியுடன் தனது மரியாதையைத் தெரிவித்துள்ளார்.



