
சிப்பாங், அக்-1-இவ்வார இறுதியில் சிப்பாங் அனைத்துலக பந்தயத்தளத்திற்குச் செல்லும் F1 ரசிகர்கள், பந்தயம் மட்டுமின்றி உணவுக்கான செலவையும் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு விற்கப்படும் உணவுகளின் விலை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பொரித்த முட்டையுடன் கூடிய ஒரு தட்டு நாசி லெமாக் 35 ரிங்கிட் என்றும், சிக்கன் ரைஸ் மற்றும் பொரித்த முட்டையுடன் கூடிய துரித மீ தலா 30 ரிங்கிட் என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நறுக்கிய பழங்கள் கூட 20 ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது.
வழக்கமாக மலேசியர்கள் அன்றாடம் சாப்பிடும் நாசி லெமாக், சிக்கன் ரைஸ், துரித மீ போன்ற உணவுகளுக்கு அவ்வளவு விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, நான்கு பேர் கொண்ட குடும்பம் தலா 35 ரிங்கிட் விலையில் விற்கப்படும் நாசி லெமாக் வாங்கினால், பானங்கள் மற்றும் சிற்றுண்டிகள் இல்லாமலேயே 140 ரிங்கிட் செலவாகிவிடும்.
டிக்கெட், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுடன் உணவுக்கான தொகையும் சேரும்போது, பந்தயத்தைக் காணச் செல்வோர் கணிசமான தொகையைச் செலவுட நேரிடலாம். எனவே, அங்குச் செல்லும் முன் உணவுப் பட்டியலையும் விலைகளையும் பார்த்துக் கொள்வது ரசிகர்களுக்கு உதவியாகவே இருக்கும்.
பந்தயத்தைத் தாண்டி உணவு, பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா அனுபவத்தையும் வழங்கும் நிகழ்வாக F1 கருதப்படுகிறது. இந்நிலையில், அங்கு உணவு விலை அதிகமாக இருப்பது பலரது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. 35 ரிங்கிட் நாசி லெமாக் உண்மையிலேயே ‘Pole-position’ விலையா, அல்லது ‘Pit-stop வலியா?



