
சிப்பாங், அக்-05-நேற்று Bahrain GP பந்தயம் முடிவடைந்து நெடு நேரமாகியும் சிப்பாங் அனைத்துலகச் சுற்றுப்பாதையான SICயிலும் கோலாலம்பூர் மற்றும் விமான நிலையம் செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாலை 6.30 மணியளவில் பந்தயம் முடிவடைந்தது. எனினும் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பந்தயத் திடலுக்கு அருகிலும் போக்குவரத்து மையங்களிலும் சிக்கியிருந்ததாக சமூக ஊடகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. சிலர் Mitsui Outlet Park மற்றும் KLIA-வுக்கு நடந்தே செல்லத் தொடங்கினர். சில மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சிக்கிய ரசிகர்களுக்கு உதவ முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பந்தயத்தளத்தைச் சுற்றியுள்ள போக்குவரத்து நிலவரத்தையும் மக்கள் நடமாட்டத்தையும் அதிகாரிகள் கண்காணித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் அருகிலுள்ள போக்குவரத்து மையங்களுக்குச் செல்லும் shuttle பேருந்துகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக ரசிகர்கள் அதிருப்தி வெளியிட்டிருந்தனர். பந்தயத்தளத்திற்குள் நுழைவதிலும் வெளியேறுவதிலும் ஏற்பட்ட தாமதம் மற்றும் shuttle பேருந்துகளுக்காக காத்திருந்த மக்கள் நெடுஞ்சாலையின் அவசரப் பாதையில் நடந்து சென்ற சம்பவம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2017ஆம் ஆண்டு Malaysian GP ரத்து செய்யப்பட்டது. ஒன்பதாண்டுகளுக்குப் பிறகு சிப்பாங் தளத்தில் நடைபெற்ற முதல் F1 பந்தயம் Bahrain GP ஆகும்.



