
தும்பாட், அக்டோபர்-6 – கிளந்தான், தும்பாட்டில் உள்ள பள்ளிவாசல் ஒன்று சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தில் பள்ளிவாசலின் கதவு உடைக்கப்பட்டதுடன், தொழுகை நடைபெறும் பகுதியில் உள்ள விரிப்பின் மீது துர்நாற்றம் வீசும் பச்சை கலந்த பழுப்பு நிற திரவம் ஊற்றப்பட்டுள்ளது.
நேற்று காலை பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் கதவு சேதமடைந்திருப்பதையும், உள்ளே விரிப்பின் மீது சந்தேகத்திற்குரிய திரவம் ஊற்றப்பட்டிருப்பதையும் கண்ட நிர்வாகத்தினர், அது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அந்தத் திரவம் என்ன என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவத்திற்கான காரணம் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காணும் நோக்கில் போலீஸார் விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, சம்பவம் தொடர்பில் பொது மக்கள் யூகங்களைப் பரப்பாமல், அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



