
பெர்லிஸ், அக்டோபர் 13 – பெர்லிஸ் கங்கார் (Kangar) பகுதியில் இரண்டு சாக்குப் பைகளில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட கொலை வழக்கு தொடர்பாக, 38 வயதுடைய ரோஹிங்கியா ஆடவன் ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அட்டையை வைத்திருக்கும் அவன், கடந்த திங்கட்கிழமை குவாலா பெர்லிஸ் (Kuala Perlis) பகுதியில் கைது செய்யப்பட்டான். இந்நிலையில் கைதான ஆடவனுக்கு போதைப்பொருள் தொடர்பான குற்றப் பதிவு இருப்பதாகவும், விசாரணையில் இதுவரை எந்த ஒப்புதல் வாக்குமூலமும் அளிக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை 26ஆம் தேதி பெஹோர் மாலி (Behor Mali) பகுதியில் முதல் சாக்குப் பையில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 5ஆம் தேதி, அருகிலுள்ள பகுதியில் மற்றொரு சாக்குப் பையில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்ட வழக்கைக் கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.



