
தோக்யோ, அக்டோபர்-14,ஜப்பானில் தற்கொலை முயற்சியாகக் கட்டடத்தின் 11-ஆவது மாடியிலிருந்து குதித்த ஆடவர் உயிர் தப்பிய நிலையில், அவர் கீழே சென்றுகொண்டிருந்த இளம் பெண் மீது விழுந்ததில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
நகோயா நகரில் ஜூலை 19-ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்தது.
29 வயதான Shinsei Taguchi, கட்டடத்திலிருந்து குதித்தபோது, 23 வயது Tomoki Inaba மீது விழுந்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த அந்த இளம் பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களில் உயிரிழந்தார்.
உயிர் தப்பிய Taguchi, மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பின்னர், கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைதுச் செய்யப்பட்டார்.
ஆனால், அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே தமக்கு ஞாபகம் இல்லை என, அவர் விசாரணையாளர்களிடம் கூறியுள்ளாராம்.
இந்நிலையில், தனது மகளின் மரணத்திற்குக் காரணமானவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் என Tomoki-யின் தந்தை வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக அவர் தொடங்கிய கையெழுத்து இயக்கத்தில் 45,000-க்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஆடவரின் மனநிலை மற்றும் குற்றவியல் பொறுப்பு குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.



