Latestமலேசியா

நேப்பாள வெள்ளத்தில் காணாமல் போன 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு கடன் தவணை ஒத்திவைப்பு; பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

கோலாலம்பூர், அக்-14 –நேப்பாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு ஆறு மாத கால கடன் தவணை ஒத்திவைப்பு வழங்கப்பட்டுள்ளது. தங்களின் அன்புக்குரியவர்கள் குறித்த தெளிவான தகவல்களுக்காகக் காத்திருக்கும் அக்குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் அத்தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 12ஆம் தேதி பேங்க் நெகாரா மலேசியாவுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, HSBC மற்றும் பப்ளிக் வங்கி ஆகியவை கடன் தவணை ஒத்திவைப்பை எழுத்துப்பூர்வமாக உறுதிப்படுத்தியதாக Malaysia Solidarity Families In Hope (MASFIH) அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் செய்தித் தொடர்பாளருமான டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் தெரிவித்தார். மேலும் இரு வங்கிகள் தவணை ஒத்திவைப்பு மற்றும் அபராதத் தள்ளுபடிக்கு இணக்கம் தெரிவித்துள்ளன; எனினும், வட்டித் தள்ளுபடி குறித்த உறுதிப்படுத்தல் இன்னும் கிடைக்கவில்லை என அவர் கூறினார்.

இதனிடையே, பெருவெள்ளத்தில் காணாமல் போன 54 மலேசியர்களின் நிலையை உறுதிப்படுத்த நேப்பாள அரசாங்கத்திடமிருந்து ஏதேனும் அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளதா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என மணிவண்ணன் கேட்டுக் கொண்டார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும் வெளியுறவு அமைச்சு தெரியப்படுத்த வேண்டும் என்றாரவர்.

50 நாட்களாக நீடிக்கும் நிச்சயமற்ற நிலைக்கு முடிவுகட்ட, காணாமல் போனவர்களின் நிலையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளையும், ஒருவர் இறந்துவிட்டதாகக் கருதப்படும் சட்ட நடைமுறைகளையும் தனித்தனியாகக் கையாள வேண்டும். மேலும், நிதிப் பதிவுகளைக் காண்பதற்கான அனுமதி, வங்கிக் கணக்குகள் மற்றும் பொறுப்புகளை அடையாளம் காணுதல், காப்பீட்டுக் கோரிக்கைகள் உள்ளிட்ட சட்டச் சிக்கல்களைத் தெளிவுபடுத்துவதற்காக, இவ்வாரம் சட்டத்துறை அலுவலகத்துடன் அவசரக் கூட்டம் நடத்தவும் MASFIH கோரியுள்ளது.

குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் நலன்களைப் பாதுகாத்து, தங்களின் நிதி மற்றும் சட்ட விவகாரங்களை முறையாக நிர்வகிக்க உதவும் வகையில் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலையே தாங்கள் நாடுவதாக மணிவண்ணன் தெரிவித்தார். சட்டத்தை மீறுவது தங்களின் நோக்கமல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் MASFIH மீண்டும் முன்வைத்துள்ளது. அக்கோரிக்கை அரசியல் நோக்கமுடையதல்ல. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சிக்கலான பிரச்சினைகளைத் தனித்தனியாக எதிர்கொள்ளாமல் ஒருங்கிணைந்த உதவியைப் பெறுவதை உறுதி செய்வதே நோக்கம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!