Latestமலேசியா

வேறொரு மதத்தின் சடங்குகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் முஸ்லிம் நபர்: அரசாங்கம் கண்காணிக்கிறது என்கிறார் Zulkifli

பாங்கி, அக்-15-வேறொரு மதத்தின் சடங்குகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் முஸ்லிம் நபர் தொடர்பான விவகாரத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் Dr Zulkifli Hasan அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

சம்பந்தப்பட்ட மத விவகார அமைப்புகளுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் அந்தந்த மாநிலங்களின் மத விவகாரத் துறைகளின் அதிகார வரம்பைத் தமது அலுவலகம் மதிப்பதாக அவர் கூறினார்.

இவ்வேளையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மத மற்றும் அறநெறிக் கல்வியை ஊக்குவிக்கவும் தேவையான உதவிகளை வழங்க ஜாகிம் (JAKIM) தயாராக இருப்பதாக Zulkifli தெரிவித்தார். பிற மத அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவ்விவகாரம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் அந்தந்த மாநில இஸ்லாமிய மத விவகாரத் துறைகளால் மேற்கொள்ளப்படும் என்றார்.

அக்டோபர் 13ஆம் தேதி கோலாலம்பூரில், வேறொரு மதத்தின் சடங்குகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 21 வயது முஸ்லிம் ஆடவர் கைது செய்யப்பட்டதை சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையான JAIS முன்னதாக உறுதிப்படுத்தியது. ஷா ஆலம் கீழ்நிலை ஷரியா நீதிமன்றம் பிறப்பித்த கைது ஆணையின் அடிப்படையில், கூட்டரசு பிரதேச இஸ்லாமிய சமயத் துறையால் (JAWI) அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது 52 வயது தாயாரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிலாங்கூர் பத்து மலையில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவின்போது, வேறொரு மதத்தின் சடங்குகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர் தொடர்பில் JAIS விசாரணை நடத்தி வருவதாக இதற்கு முன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அச்சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!