நான்காம் படிவ மாணவி Irene Sofiya கொலை: சக மாணவர் மீது குற்றச்சாட்டு

பத்து பஹாட், அக்-15-16 வயதான Irene Sofiya Mohd Khairool Faisalலைக் கொலை செய்ததாக சக மாணவர் மீது பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனைப் புரிந்து கொள்வது போல் அம்மாணவர் தலையசைத்தார். கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் அவரிடம் இருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை, யோங் பெங்கில் உள்ள SMK Dato Seth பள்ளி மண்டபத்தில் Irene Sofiyaவைக் கொலை செய்ததாக அந்த மாணவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கைகள் இன்னும் கிடைக்காததால், வழக்கை ஒத்திவைக்குமாறு முன்னதாக அரசுத் தரப்பு கோரியது. அதனை அடுத்து குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பிணை வழங்க மறுத்த நீதிமன்றம், அடுத்த விசாரணையை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், காவல்துறையினர் அம்மாணவரை நீதிமன்றத்தின் பின்புற நுழைவாயில் வழியாக வெளியே அழைத்துச் சென்றனர்.
Irene Sofiya அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளி மண்டபத்தில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். அச்சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் சுமார் 96 சென்டிமீட்டர் நீளமுள்ள உலோகப் பொருள் உட்பட காவல் துறையினர் பல பொருட்களை மீட்டனர்.



