
கோலாலம்பூர், அக்டோபர் 15 – கடுமையான சாலைப் போக்குவரத்துக் குற்றங்களில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்படுவோர், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிரிழந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கும் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிடும் வகையில், 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.
இதனைப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் (Anthony Loke) இன்று மக்களவையில் தெரிவித்தார். இந்தத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவை கடந்த ஜூலை 15ஆம் தேதி ஒப்புதல் அளித்ததாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் அரசு அமைப்புகளுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த இழப்பீடு, உயிரிழப்பு, கடுமையான காயம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்ட சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதி கிடைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் வாகனம் ஓட்டுவதற்கான தடை போன்ற தற்போதைய தண்டனைகளுக்கு மேலதிகமாக அமையும்.
மேலும், மது அல்லது போதைப்பொருள் செல்வாக்கில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படுமென்று 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருந்தார்.



