
கோலாலம்பூர், அக்டோபர்-17,சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளி பயணி ஒருவர் உடனிருப்பதாகக் கூறி, தங்களை ஏற்றிச் செல்ல மறுத்த Grab ஓட்டுநரின் செயலால் பெண் ஒருவர் கடும் சினத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Threads சமூக வலைத்தளத்தில் @nurulazreen95 என்ற கணக்கு மூலம் பகிரப்பட்ட இந்தத் தகவலின்படி, ஓட்டுநர் எந்த விளக்கத்தையும் கேட்காமல் உடனடியாகச் சென்றதுடன், கட்டடத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்த சக்கர நாற்காலி பயணியின் மீது மோதும் அளவுக்கு அருகில் சென்றதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் மொத்தம் 8 பேர் இரண்டு கார்களை முன்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து Grab நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது.
அதோடு, மாற்றுத்திறனாளிகள் மீதான எந்தவொரு வன்முறை அல்லது பாகுபாட்டையும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் அது வலியுறுத்தியது.
சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க ஏதுவாக, தேவையான விவரங்களைத் தருமாறு Grab தரப்பு பாதிக்கப்பட்ட பயணிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
வலைத்தளவாசிகளும் இச்சம்பவத்தைக் கண்டித்து, சம்பந்தப்பட்ட Grab ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.



