Latestமலேசியா

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்கள்: மோட்டார் சைக்கிள் உரிம வயதை 18 ஆக உயர்த்த Miros பரிந்துரை

பெட்டாலிங் ஜெயா, அக்- 19-இளையோரிடையே சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்களைக் கட்டுப்படுத்த, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18 ஆக உயர்த்த வேண்டும் என்று மலேசிய சாலைப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான MIROS பரிந்துரைத்துள்ளது.

12 வயதுடைய சிறுவர்கள் கூட உரிமம் இன்றி மோட்டார் சைக்கிள்களை ஓட்டுகின்றனர். அவர்களில் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களும் அடங்குவர். அவர்கள் விபத்துகள் மற்றும் சட்டவிரோதப் பந்தயங்களுக்கு ஆட்படும் அபாயம் அதிகரிப்பதாக Miros தலைவர் பேராசிரியர் Dr Wong Shaw Voon தெரிவித்தார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டத் திருத்தங்களின் கீழ், ‘Mat Rempit’ எனப்படும் சட்டவிரோதப் பந்தயங்களில் ஈடுபடுவதற்கும் பொறுப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவதற்கும் 10,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம். இருப்பினும், உரிமம் பெறுவதற்கான வயதை 18 அல்லது 21 ஆக உயர்த்துவது மட்டுமே போதுமானதல்ல. சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் பெற்றோர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என Wong வலியுறுத்தினார்.

இவ்வேளையில், உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயதை 16-லிருந்து உயர்த்தும் முன்மொழிவு குறித்த முடிவு, குற்றவாளிகளின் தரவுகளை ஆய்வு செய்த பின்னரே எடுக்கப்பட வேண்டும் என Chartered Institute of Logistics and Transport Malaysia தலைவர் பேராசிரியர் Dr Muhammad Zaly Shah Muhammad Hussein கூறியுள்ளார்.

இளம் ஓட்டுநர்கள் விதிமுறைகளைப் பின்பற்றினால், வயது வரம்பு உயர்வு, அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், விபத்துகளைக் குறைப்பதிலும் சட்டவிரோதப் பந்தயங்களைக் கட்டுப்படுத்துவதிலும் அந்நடவடிக்கை ஏற்படுத்தும் தாக்கங்களைத் தனித்தனியாக மதிப்பிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!