Latestமலேசியா

பொதுத் தேர்தல் ஆகஸ்ட் 2027-க்குள் வரலாம்; கசப்பாகும் PH-UMNO உறவு, தேர்தல் ஆணையத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு அதற்கான அறிகுறி – ஹம்சா

கோலாலம்பூர், அக்டோபர்-20,பக்காத்தான் ஹராப்பான் (PH) மற்றும் அம்னோ இடையே அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 16-வது பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கக்கூடும் என, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் நம்புகிறார்.

BFM வானொலிக்கு அளித்த பேட்டியில் பேசிய ஹம்சா, கடந்த 4 ஆண்டுகளாக மௌனம் காத்து வந்த பி.கே.ஆர் மற்றும் PH எம்பிக்கள், துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியின் நீதிமன்ற வழக்குகள் குறித்து இப்போது கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளதைச் சுட்டிக் காட்டினார்.

இந்நிலையில், ஒற்றுமை அரசாங்கம் 2027-க்கு மேல் நீடிக்காது என, வவாசான் கட்சித் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.

தவிர, பொது மக்களின் நன்மதிப்பைப் பெற 2027 செப்டம்பர் மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள சீ விளையாட்டுப் போட்டியை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டு, உடனடியாகத் தேர்தலைச் சந்திக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்திற்கான நிதி ஒதுக்கீடு கோடிக் கணக்கில் உயர்த்தப்பட்டிருப்பதும் தேர்தல் நெருங்குவதற்கான அறிகுறியாகும் என்றார் அவர்.

அடுத்த பொதுத்தேர்தல் 2028 பிப்ரவரிக்குள் நடத்தப்பட வேண்டும் என்றாலும், முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக பிரதமர் அன்வாரும் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!