
சென்னை, நவம்பர் 19 – மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய கவிதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘வருவாய்’ (Varuvaayi) என்ற தமிழ் பாடல், 2027ஆம் ஆண்டுக்கான 69ஆவது கிராமி விருதுகளில் சிறந்த உலக இசை நிகழ்ச்சி (Best Global Music Performance) பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் பாடல் என்ற வரலாற்றுப் பெருமையை ‘வருவாய்’ பெற்றுள்ளது.
பாரதியார் எழுதிய கிருஷ்ண பக்திக் கவிதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்பாடலுக்கு தேவன் ஏகாம்பரம் இசையமைத்துப் பாடியுள்ளார். அவருடன் இணைந்து சுபிஷா ரங்கராஜனும் (சூசா) பாடியுள்ளார். கர்நாடக இசையுடன் ராக், ஜாஸ் உள்ளிட்ட நவீன இசை அம்சங்களையும் இணைத்து இப்பாடல் தனித்துவமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வளர்ந்த தேவன் ஏகாம்பரம், 1999ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘காதலர் தினம்’ திரைப்படத்தின் ‘ஓ மரியா’ பாடல் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இதுவரை தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். பாடகராக மட்டுமின்றி இசையமைப்பாளர், தயாரிப்பாளர் எனவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
அதேவேளை, கர்நாடக இசையில் முறையாகப் பயிற்சி பெற்ற சுபிஷா ரங்கராஜன், கனடாவின் டொராண்டோ (Toronto) பல்கலைக்கழகத்தில் ஜாஸ் இசையையும் பயின்றுள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுப் பரிந்துரைகள் நவம்பர் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட ஒரே இசைப் பதிவாகவும் ‘வருவாய்’ பாடல் இடம்பெற்றுள்ளது.
விருது வழங்கும் விழா 2027 பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினமே பாடலுக்கு விருது கிடைக்குமா என்பது தெரியவரும். இருப்பினும், பாரதியாரின் நூற்றாண்டு பழமையான தமிழ் கவிதை நவீன இசை வடிவில் உலகளாவிய அங்கீகாரம் பெற்றிருப்பது தமிழ் இசை உலகிற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது.



