Latestமலேசியா

தனுஷ், மம்மூட்டி நடித்த ‘OM’ இன்று மலேசியா முழுவதும் 89 திரையரங்குகளில் பிரம்மாண்ட வெளியீடு!

கோலாலம்பூர், நவ.20-தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களான தனுஷ், மம்மூட்டி முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘OM’ திரைப்படம், மலேசியா முழுவதும் இன்று 89 திரையரங்குகளில் வெளியாகிறது. ‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் தனுஷ், மம்மூட்டியுடன் சாய் பல்லவி, நசீருதீன் ஷா, ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். தனுஷ் – மம்மூட்டி கூட்டணி மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் படைப்பு என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் நிலவுகிறது.

இதனிடையே, மலேசியாவில் இப்படத்தின் சிறப்புக் காட்சி இன்று காலை 8.30 மணிக்கு TSR Cinemax திரையரங்கில் நடைபெற்றது. Veedu Productions, Era Studios மற்றும் Social Culprit இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் சில காட்சிகள் மலேசியாவின் மஸ்ஜித் இந்தியா பகுதியில் படமாக்கப்பட்டதாக Veedu Productions நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டெனேஷ் குமாரும், அதன் இணை நிறுவனரும் இயக்குநருமான டாக்டர் விமலா பெருமாளும் தெரிவித்தனர். துபாயில் நடைபெறுவதாகச் சித்தரிக்கப்படும் காட்சிகளைப் படமாக்குவதற்காகவே மஸ்ஜித் இந்தியா பகுதி பயன்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மலேசியாவில் இப்படத்தை Veedu Productions மற்றும் Era Studios இணைந்து விநியோகிக்கின்றன. நாடு முழுவதும் 89 திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என Era Studios நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி அனீஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்வேளையில், சிறப்புக் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் படத்தின் கதை, நடிகர்களின் நடிப்பு மற்றும் இயக்குநரின் படைப்பைப் பாராட்டி தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘OM’ திரைப்படம், மலேசிய ரசிகர்களின் வரவேற்பைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!