
பந்திங், நவம்பர்-21,சிலாங்கூர், பந்திங்கில் உள்ள பொருட்கள் சேமிப்பு மற்றும் விநியோக மையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், 1.27 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சுகாதார, அழகுசாதன மற்றும் உணவுப் பொருட்களைப் போலீஸ் பறிமுதல் செய்துள்ளது.
வியாழக்கிழமை நண்பகல் 12.10 மணியளவில், Op Taring Dosej என்ற பெயரில் பல்வேறு அமுலாக்கத் தரப்பினருடன் இணைந்து இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்போது, நிறுவனத்தின் உரிமையாளர் என நம்பப்படும் உள்ளூர் ஆடவர் ஒருவரும், வங்காளதேசத்தைச் சேர்ந்த இரு தொழிலாளர்களும் கைதுச் செய்யப்பட்டனர்.
சோதனையில், 1,044 பெட்டிகளில் சுகாதார மற்றும் அழகுசாதனப் பொருட்கள், 1,300 பாட்டில்களில் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புக்கிட் அமான் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தளபதி டத்தோ முஹமட் ஸாக்கி அஷார் இதனைத் தெரிவித்தார்.
குடிநுழைவுச் சட்டம், மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் கட்டுப்பாட்டு விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.



