
ஜோகூர் பாரு, ஏப்ரல்-13, AI அதிநவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் பெண்களின் நிர்வாணப் படங்களை உருவாக்கி, இணையத்தில் அவற்றை விற்ற சந்தேகத்தின் பேரில் கைதான 16 வயது பையனின் தடுப்புக் காவல், வரும் செவ்வாய்க் கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் அதனை உறுதிப்படுத்தினார்.
அவனது தடுப்புக் காவல் நேற்றோடு முடிவடைந்த நிலையில், விசாரணைகளுக்கு உதவ ஏதுவாக அது நீட்டிக்கப்பட்டது.
அச்சம்பவம் தொடர்பில் இதுவரை 22 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன; அவன் உண்மையிலேயே எதற்காக அப்படி செய்தான் என்பது தொடர்ந்து கண்டறியப்பட்டு வருவதாக குமார் சொன்னார்.
சமூக ஊடகங்கள் குறிப்பாக facebook-கிலிருந்து பெண்களின் புகைப்படங்களைத் ‘திருடி’ AI மூலம் நிர்வாணப் படங்களில் அவர்களின் முகங்களை அவன் எடிட் செய்துள்ளான்; பிறகு சமூக ஊடகங்களில் மிகக் குறைந்த விலையாக 2 ரிங்கிட்டுக்கு அவற்றை விற்று அவன் காசு பார்த்து வந்துள்ளான்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான 18 வயது வயது பெண், தன் முகம் பொறிக்கப்பட்ட அத்தகையப் புகைப்படங்கள் இணையத்தில் உலா வருவது கண்டு அதிர்ச்சி அடைந்து, ஏப்ரல் 3-ஆம் தேதி போலீஸில் புகார் செய்தார்.
அப்போது தான் அவனது குட்டு வெளிச்சத்துக்கு வந்து, போலீஸும் அதிரடி விசாரணையில் இறங்கியது.