
கோலாலம்பூர், அக்-08-செயற்கை நுண்ணறிவு (AI), எக்ஸ்டெண்டெட் ரியாலிட்டி (XR) மற்றும் அதிவேகத் தொழில்நுட்பத் துறைகளில் மலேசியாவின் நிலையை உயர்த்தும் நோக்கில், 4வது XR ஏசியா சம்மிட் 2027 மாநாடு அடுத்தாண்டு ஜனவரி 20 முதல் 22 வரை மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான FINAS-இல் நடைபெறவுள்ளது.
உள்நாட்டு தொழில்நுட்ப நிறுவனமான XR Summits Sdn Bhd இந்த மாநாட்டை ஏற்பாடு செய்கிறது. மலேசியா மற்றும் ஆசிய-பசிபிக் வட்டாரத்தைச் சேர்ந்த தொழில்துறையினர், தொழில்நுட்ப வழங்குநர்கள், படைப்பாளிகள், கல்வியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் திறமையாளர்களை ஒன்றிணைப்பது இதன் நோக்கமாகும்.
AI, XR, ஸ்பேஷியல் கம்ப்யூட்டிங், ஸ்பேஷியல் மீடியா மற்றும் விர்ச்சுவல் புரொடக்ஷன் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை நடைமுறைப் பயன்பாடுகளுடனும் வணிக வாய்ப்புகளுடனும் இணைப்பதில் மாநாடு கவனம் செலுத்தும். தொழில்நுட்பக் கண்காட்சிகள், மாநாட்டு அமர்வுகள், பயிற்சிகள், பட்டறைகள், திரைப்படத் தயாரிப்பு ஹேக்கத்தான் மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் போட்டிகளும் இடம்பெறவுள்ளதாக XR சம்மிட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லூயிஸ் குளோவிஸ் தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத்திற்குத் தயாரான திறமைகளை உருவாக்குதல், AI மற்றும் XR தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு, நடைமுறைச் செயல்பாட்டுக்குத் தயாரான புதுமைகள் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களில் மாநாடு கவனம் செலுத்தும். உள்ளூர் திரைப்பட மற்றும் படைப்பாக்கத் துறைகளை வட்டார, அனைத்துலக தொழில்நுட்பப் பங்காளர்களுடன் இணைத்து, விர்ச்சுவல் புரொடக்ஷன் மற்றும் அதிவேக உள்ளடக்கத் தயாரிப்பில் மலேசியாவின் வளர்ச்சியை ஊக்குவிப்பதும் இதன் இலக்காகும்.



