
பெடோங், ஏப்ரல்-27- ‘AIMST நமது தேர்வு’ பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக பினாங்கு ம.இ.கா ஏற்பாட்டில் 1,100 மாணவர்கள் நேற்று கெடா, AIMST பல்கலைக்கழகத்திற்கு இலவச சுற்றுலா மேற்கொண்டனர்.
13 நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்து SPM, STPM மாணவர்களோடு அவ்விரு பொதுத் தேர்வுகளையும் முடித்த மாணவர்களும் இதில் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு AIMST வழங்கும் டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்புகள் குறித்தும் அதற்குத் தேவையான குறைந்தபட்ச தேர்ச்சி குறித்தும் விளக்கப்பட்டதால், மாணவர்களுக்குத் தெளிவுக் கிடைத்ததாக கே.பார்வதி சொன்னார்.
அறிவியல், மருத்துவம், மருந்தகம், பொறியியல் உள்ளிட்ட அனைத்துக் கல்விப் புலங்களும் அவர்களுக்கு சுற்றிக் காட்டப்பட்டன.
அங்குள்ள வசதிகளைக் கண்டு மாணவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியதாக, ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் அர்வின் கிருஷ்ணன் கூறினார்.
இலவசக் கல்விச் சுற்றுலா, AIMST பொது நாள் என ஒரே சமயத்தில் 2 நிகழ்வுகள் நடைபெற்றதால், ஏராளமான மாணவர்களுக்கு AIMST பற்றி விளக்கமளிக்கத் தோதுவாக இருந்ததாக, மாணவர் சேர்ப்புப் பிரிவின் துணைத் தலைவர் திரன் தெரிவித்தார்.
இதனிடையே, AIMST-டில் உள்ள கல்வி வசதிகள் குறித்து துல்லியமாக மாணவர்களுக்கு விளக்கப்பட்ட நிலையில், மிகச் சிறந்த தேர்ச்சிகளுடன் வரும் மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் வழங்க ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் எடுத்து வரும் முயற்சிகளை ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் எல். சிவ சுப்ரமணியம் பாராட்டினார்.
மாணவர்களோடு வந்திருந்த சுமார் 200 பெற்றோர்களுக்கும் இந்நிகழ்வு மனதிருப்தியை ஏற்படுத்தியதாக, பினாங்கு ம.இ.கா தலைவர் ஜெ. தினகரன் கூறினர்.
வாழ்க்கையில் முன்னேற கல்வி மிகவும் முக்கியமாகும்.
இதனை முன்னிறுத்தியே AIMST பல்கலைக்கழகம் நமது இந்திய மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது.
அதோடு, பெற்றோர்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் உபகாரச் சம்பளம் மற்றும் கல்வி கடனுதவிகளும் வழங்கப்படுகின்றன.
இந்த வாய்ப்புகளையும் கெடாவில் அமைந்துள்ள பிரமாண்ட AIMST பல்கலைக்கழக வளாகத்தையும் மாணவர்கள் நேரில் கண்டு உணர ஏதுவாக இந்த ஒரு நாள் இலவச கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.