
கோலாலம்பூர், ஜனவரி-22 – விழாக் கால இலவச டோல் கட்டணச் சலுகை இனி குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் B40, M40 வர்கத்தினருக்கு மட்டுமே வழங்கப்படலாம்.
PADU எனப்படும் முதன்மை தரவுத் தள முறையின் வாயிலாக அச்சிறப்பு வழிவகையை அரசாங்கம் அறிமுகப்படுத்தக் கூடும்.
பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் விழாக் கால இலவச டோல் கட்டணச் சலுகை, வரும் சீனப் புத்தாண்டு தொடங்கி நிறுத்தப்படுவதால் அவ்வாறு எதிர்பார்க்கப்படுகிறது.
PADU-வில் நாட்டு மக்களின் துல்லிய விவரங்கள் அடங்கியிருப்பதால், உண்மையிலேயே உதவித் தேவைப்படுவோர் மட்டுமே அனுகூலங்களை அனுபவிப்பதை உறுதிச் செய்ய அம்முறை பயன்படுத்தப்படலாம்.
மலேசியப் பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளமான FOMCA-வின் தலைமை செயலதிகாரி டி. சரவணன் அவ்வாறு கூறினார்.
விழாக் கால இலவச டோல் கட்டணச் சலுகை இனியும் கிடையாது என்ற அறிவிப்பின் மூலம், அரசாங்கம் 3 முக்கிய சமிக்ஞைகளை மக்களுக்கு வழங்கியுள்ளதாக அவர் சொன்னார்.
செலவினங்களை திறம்பட கையாளுதல், அத்திவாசியத் தேவைகளுக்கு முன்னுரிமைக் கொடுத்தல், நிதி நிலையை கவனமாக நிர்வகித்தல் ஆகியவையே அம்மூன்று விஷயங்களாகும்.
மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கும் என்பதற்காக அத்திட்டத்தைத் தொடர முடிவுச் செய்து, மறு பக்கம் நிதிச் சுமையை எதிர்கொள்ள அரசாங்கம் விரும்பவில்லை என்பதும் தெளிவாகத் தெரிவதாக, BH-சிடம் சரவணன் கூறினார்.
விழாக் கால இலவச டோல் கட்டணச் சலுகையை நிறுத்துவதற்கு, கடந்தாண்டே அமைச்சரவை முடிவுச் செய்து விட்டதாக பொதுப் பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி நேற்று அறிவித்திருந்தார்.
மாறாக, இலக்கிடப்பட்ட கட்டணச் சலுகை முறை அறிமுகமாகலாமென அவர் கோடி காட்டினார்.