
புத்ராஜெயா, ஏப்ரல்-8-BUDI95 திட்டத்தின் கீழ் RON95 எரிபொருள் மானிய வரம்பு அதிகரிக்கப்பட்டதாக வெளியான தகவல்களை நிதியமைச்சு மறுத்துள்ளது.
தற்போது மாதத்திற்கு 200 லிட்டர் என்ற வரம்பு மாற்றமின்றி தொடருவதாக அது கூறிற்று.
மானியத் தகுதிக்கான வரம்பை உயர்த்துவதற்கு பொது மக்கள் விண்ணப்பிக்க ஏதுவாக, BUDI95 இணையத் தளத்தில் ஒரு புதிய அம்சம் இருப்பதாக வதந்தி பரவி வருவது குறித்து அமைச்சு கருத்துரைத்தது.
அப்புதிய அம்சம் உண்மையில் பொது மக்களுக்கு அல்ல… மாறாக, e-hailing ஓட்டுநர்கள் மற்றும் படகு நடத்துநர்கள் போன்ற குறிப்பிட்ட பயனர்கள், சிறப்புத் தேவையின் அடிப்படையில் மட்டுமே பயன்படுத்த அமைக்கப்பட்டதாகும்.
ஆனால், இந்த அம்சம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதால், மேலும் குழப்பத்தைத் தவிர்க்க, அது தற்போது நீக்கப்பட்டுள்ளது என அமைச்சு விளக்கியது.
இந்த 200 லிட்டர் வரம்பானது, சுமார் 90 விழுக்காட்டு பயனர்களுக்கு போதுமானது என்றும், அரசாங்கத்தின் மானியச் செலவுகளை கட்டுப்படுத்த இது உதவுவதாகவும் அமைச்சு தெரிவித்தது.
RON95 பெட்ரோலின் நடப்பு மானிய விலை லிட்டருக்கு RM1.99-தாக இருக்கும் நிலையில், ஒருவருக்கு மாதத்திற்கு சுமார் RM500 வரை அரசாங்கம் மானியம் வழங்குகிறது.
இத்திட்டத்தை தொடர்ந்து கண்காணித்து, மானியம் இலக்கிடப்பட்டவர்களுக்கே போய்சேருவதை அரசாங்கம் உறுதிச் செய்யும் என்றும் அமைச்சு உறுதியளித்தது.



