
புத்ராஜெயா, செப்டம்பர்,-29,
BUDI95 பெட்ரோல் மானியத் திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை முழுமையாக அமுல்படுத்தப்படும் முன், தகுதிப் பெற்ற குடிமக்களின் பெயர் சேர்க்கையில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்க்க நிதி அமைச்சு சாலைப் போக்குவரத்து துறையான JPJ-வுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் அதனைத் தெரிவித்தார்.
MyKad அடையாள மற்றும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தாலும், தாங்கள் தகுதியற்றவர்களாகக் குறிப்பிடப்பட்டதாக சிலர் புகார் அளித்துள்ளனர்.
இச்சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும் என்றும், தகுதிப்பெற்ற அனைத்து மலேசியர்களும் BUDI95 திட்டத்தின் அனுகூலத்தைப் பெற 100% உரிமை கொண்டவர்கள் என்றும் அவர் சொன்னார்.
முன்னதாக பினாங்கு பட்டர்வொர்த்தில் STR பெறுநர்களுக்கான சலுகை நடைமுறையைப் பார்வையிட்ட அவர், பொதுமக்கள் budimadani.gov.my இணையதளத்தில் தங்களின் தகுதியைச் சரிபார்க்கலாம் அல்லது _hotline_சேவையில் 1300-88-9595 எண்களுக்கு அழைக்கலாம் என்றார்.
தகுதிப் பெற்ற ஒவ்வொருவருக்கும் மானிய விலையில் மாதம் 300 லிட்டர் பெட்ரோல் வரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 25 முதல் 81 லட்சம் பேர் தங்கள் தகுதியைச் சரிபார்த்துள்ளனர்.
நேற்று முன்தினம் BUDI95 திட்டம் தொடங்கிய நிலையில், இராணுவத்தினர், போலீஸார் மற்றும் 2 லட்சம் STR பெறுநர்கள் நேற்று மதியம் வரை RM3.7 மில்லியன் மதிப்பிலான RON95 பெட்ரோலை லிட்டருக்கு RM1.99 என்ற சலுகை விலையில் பெற்றுள்ளனர்.
இத்திட்டம் மொத்தம் 16 மில்லியன் மலேசியர்களுக்கு பயனளிக்கும்.