ChatGPT-யை பயன்படுத்தியே லாஸ் வெகாஸ் சைபர் டிரக் வெடிப்புக்கு திட்டம்; போலீஸ் அம்பலம்
லாஸ் ஏஞ்சல்ஸ், ஜனவரி-2, புத்தாண்டு தினத்தன்று அமெரிக்கா, லாஸ் வெகாசில் டோனல்ட் டிரம்ப்புக்குச் சொந்தமான ஹோட்டலுக்கு வெளியே சைபர் டிரக் எனப்படும் மின்சார டிரக் வாகனம் வெடித்ததில், ChatGPT-யின் உதவி நாடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த சைபர் டிரக் ஓட்டுநர், AI அதிநவீன தொழில்நுட்பத்தில் செயல்படும் ChatGPT-யைப் பயன்படுத்தி, சில ஆலோசனைகளைப் பெற்றுள்ளார்.
அதாவது, வெடிப்பை உருவாக்க எவ்வளவு வெடிப்பொருட்கள் தேவை என்பதை ChatGPT-யிடம் தான் அவர் கேட்டுள்ளார்.
அமெரிக்க மண்ணில் ChatGPT துணையுடன் வெடிப்பொருள் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையென லாஸ் வெகாஸ் போலீஸ் கூறியது.
தீய நோக்கத்திற்கு இந்த AI தொழில்நுட்பம் துணைபோகலாமென, விமர்சகர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில், இந்த சைபர் டிரக் வெடிப்பு சம்பவம் அதற்கு வலுவூட்டியுள்ளது.
இவ்வேளையில், AI கருவிகள் பொறுப்போடு பயன்படுத்தப்படுவதைப் உறுதிச் செய்யும் கடப்பாட்டுக்கு ChatGPT உருவாக்குநரான OpenAI மீண்டும் உத்தரவாதம் வழங்கியுள்ளது.
தீங்கு விளைவிக்கும் உத்தரவுகளை மறுக்கும் வகையிலேயே AI சாதனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த லாஸ் வெகாஸ் சம்பவத்தில் கூட, ChatGPT தீங்கு விளைவிக்கும் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எச்சரிக்கைகளை வழங்கியதாக OpenAI கூறிக் கொண்டது.
இந்நிலையில், அந்நிறுவனம் விசாரணைக்கு அழைக்கப்படுமா என்பது குறித்து போலீஸ் தெரிவிக்கவில்லை.