
கோலாலம்பூர், செப்டம்பர்-28,
இளையத் தலைமுறையினரிடம் இந்து சமயம், கலை மற்றும் கலாச்சாரத்தை கொண்டு சேர்க்கும் நோக்கில், DSK எனப்படும் Dinamik Sinar Kasih Malaysia சமூக நலச் சங்கம் தொடர்ந்து பயிற்சித் திட்டங்களை நடத்தி வரும்.
அதன் தலைவரும் நிறுவனருமான டத்தோ என். சிவக்குமார் அந்த கடப்பாட்டை மறு உறுதிப்படுத்தியுள்ளார்
DSK ஏற்பாட்டிலான 3-மாத கால இலவச தேவார மற்றும் பரதநாட்டியப் பயிற்சிகளை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய நிகழ்வில் அவர் அதனைத் தெரிவித்தார்.
150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
“இது ஒரு நாள் பயிற்சி அல்ல, மாறாக 3 மாதங்களாக மாணவர்கள் ஆர்வத்தோடும் அர்ப்பணிப்போடும் பங்கேற்ற பயிற்சித் திட்டமாகும்” என வணக்கம் மலேசியாவிடம் சிவகுமார் பெருமிதத்தோடு சொன்னார்.
4 ஆண்டுகளாக குறிப்பாக பெற்றோர்களின் ஊக்குவிப்பின் மூலம் இப்பயிற்சி மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்து சமயத்தை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் முக்கியக் குறிக்கோளுடன், DSK குழுமம் எதிர்காலத்திலும் இதுபோன்ற பயிற்சித் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கும் என்றார் அவர்.
DSK-வின் அனைத்து முயற்சிகளுக்கும் தொடர்ந்து ஆதரவாக இருந்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானமும் அதன் தலைவர் டான் ஸ்ரீ ஆர். நடராஜாவுக்கும் சிவக்குமார் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
பத்து மலை கலாச்சார மையத்தில் நடைபெற்ற அந்நிகழ்வில், மாணவர்களுடன் பெற்றோர்களும் திரளாகப் பங்கெடுத்தனர்.