
கோலாலம்பூர், அக்-14-கோலாலம்பூர் Duta- Ulu Kelang விரைவுச்சாலையில் (DUKE) இன்று காலை காணப்பட்ட அடர்ந்த புகை, எரிந்து கொண்டிருந்த தெருவிளக்கிலிருந்து வெளியானது என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
Greenwoodடில் இருந்து கோலாலம்பூர் மருத்துவமனைக்குச் செல்லும் பாதையில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக செந்தூல் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Anuar Bakri Abdul Salam தெரிவித்தார்.
காவல்துறையும் DUKE நெடுஞ்சாலை நிர்வாகமும் மேற்கொண்ட ஆய்வில், எரிந்த தெருவிளக்கிலிருந்தே அடர்ந்த புகை வெளியேறியது தெரியவந்ததாக அவர் கூறினார். தீ பின்னர் வெற்றிகரமாக அணைக்கப்பட்டது. அச்சம்பவத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை.
வேலைக்குச் சென்று கொண்டிருந்த உள்நாட்டு ஆடவர் ஒருவர், நெடுஞ்சாலையின் வடிகால் பகுதியில் இருந்து அடர்ந்த புகை வெளியேறுவதைக் கண்டு தகவல் அளித்ததாக Anuar Bakri தெரிவித்தார். எனினும், புகை ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் அந்நபருக்குத் தெரியவில்லை. அச்சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை DUKE நெடுஞ்சாலை நிர்வாகம் மேற்கொள்ளும் என அவர் தெரிவித்தார்.
DUKE நெடுஞ்சாலைக்கு அருகே அடர்ந்த புகை வெளியேறும் காணொளி சமூக ஊடகங்களில் முன்னதாகப் பரவி, வாகனமோட்டிகளின் கவனத்தை ஈர்த்தது.



