
கோலாலம்பூர், மார்ச் 11 – சமீபத்தில் மூன்று அறிவிப்பாளர்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய உள்ளடக்க விவகாரத்தில், Era FM வானொலி நிலையத்தை செயல்படுத்தும் ஆஸ்ட்ரோவின் Maestra Broadcast நிறுவனத்தின் உரிமத்தை இடைநீக்கம் செய்யப் போவதில்லை என கூறியிருக்கிறது மலேசியா தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC.
இருப்பினும் Maestra Broadcast நிறுவனத்திற்கு 250,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படுவதாக அது தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்துக்கு எதிராக மார்ச் 7ஆம் திகதி, உரிமம் இடைநீக்கம் தொடர்பான நோட்டிஸ் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது.
உரிமம் பெற்ற நிறுவனம் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட தரப்பின் மன்னிப்பு, உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டால் அந்த நிறுவனத்தின் இதர வானொலி நிலையங்களான, Melody FM மற்றும் Mix FM ஆகியவை மீது ஏற்படும் விளைவுகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக MCMC தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் 1998ஆம் ஆண்டின் தொடர்பு மற்றும் பல்லூடக சட்ட விதிப்படி, சட்டத்துறை தலைவரின் அலுவலகத்தின் ஒப்புதலோடு இந்த அபராதம் விதிக்கப்பட்டதாகவும் MCMC கூறியுள்ளது.
மேலும், மலேசியாவின் பல்வகை சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு இணைய உள்ளடக்கத்துக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என MCMC எச்சரித்துள்ளது.
எனவே, அனைத்து ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்களும் தேசிய சட்டங்களை மதித்து, சமூக ஒற்றுமையைப் பேணுதல் அவசியம் எனவும் MCMC வலியுறுத்தியுள்ளது.