கோலாலம்பூர், டிச 5 – Fashion valet மின் வர்த்தகம் தளத்தின் தோற்றுவிப்பாளர்
Vivy Yusof மற்றும் அவரது கணவர் Fadzaruddin Shah Anuar ஆகியோர் 8 மில்லியன் ரிங்கிட் நம்பிக்கை மோசடி செய்ததாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
Vivy அல்லது Vivy Sofinas Yusof மற்றும் Fadzaruddin ஆகிய இருவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்தனர். வாரிய இயக்குனரின் அனுமதியின்றி ஆடம்பர Duck பிராண்ட் முக அங்கியை கையாளும்
30 Maple Sdn Bhd நிறுவனத்திற்கு Fashion Valet நிறுவனத்திலிருந்து 8 மில்லியன் ரிங்கிட்டை வழங்கியதாக 36 வயதுடைய அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு 21 ஆம் தேதி புக்கிட் டமன்சாராவிலுள்ள பப்ளிக் பேங்க் கிளையில் அவர்கள் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.
அரசாங்கத்தின் முதலீட்டு நிறுவனமான Khazanah Nasional Bhd மற்றும் Pengurus Aset Permodalan Nasional Bhd ஆகியவற்றிடமிருந்து அந்த பணத்தை Vivy Yusof மற்றும் Fadzaruddin Anuarரும் எடுத்ததாக குற்றற்றாட்டப்பட்டனர்.
குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் இரண்டு முதல் 20 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை , பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படும் தண்டனைச் சட்டத்தின் 409 ஆவது விதியின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.
அந்த இருவருக்கும் தலா 100,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டதோடு மாதத்திற்கு ஒரு முறை கோலாலம்பூரிலுள்ள் MACC அலுவலகத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது.
மேலும் அவர்களது கடப்பிதழ்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படியும் பணிக்கப்பட்டது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுப்பதற்கான தேதியை ஜனவரி 22 ஆம் தேதிக்கு நீதிமன்றம் நிர்ணயித்தது.