
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 4 –
மலேசிய காற்பந்து வீரர்கள், ஏழு பேருக்கு எதிராக Fifa விதித்த ஒரு வருடத் தடை குறித்து, ஜோகூர் துங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
Fifa தனது சொந்த ஒழுங்கு விதிகளை தவறாகப் பயன்படுத்தி தண்டனை விதித்துள்ளதாகவும், அந்தத் தீர்ப்பு அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டதாகத் தோன்றுவதாகவும் அவர் குற்றம் சாட்டி இருக்கின்றார்,
மேலும் Fifa ஒழுங்கு விதிமுறைகளின்படி, போலி ஆவணங்களைத் தயாரிப்பவர் அல்லது பயன்படுத்துபவர் ஆகியோருக்கு மட்டுமே தண்டனை விதிக்க முடியும். ஆனால், சம்பந்தப்பட்ட வீரர்கள் எந்த விதத்திலும் இத்தகைய குற்றச்சாட்டில் ஈடுபடவில்லை எனவும் அவர் கூறினார்.
கடந்த மாதம் மலேசிய காற்பந்து சங்கத்திற்கும்(FAM), ஏழு காற்பந்து வீரர்களுக்கும் Fifa தண்டனை விதித்தது. மலேசியா மற்றும் வியட்நாம் அணிகளுக்கிடையேயான 2027 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன், வீரர்களின் தகுதியை உறுதிப்படுத்துவதற்காக மலேசிய காற்பந்து சங்கம் போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக Fifa குற்றச்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில், காற்பந்து சங்கத்திற்கு 1.8 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு வீரருக்கும் 10,560 ரிங்கிட் அபராதம் மற்றும் 12 மாதத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மலேசிய காற்பந்து சங்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டை Fifa நிராகரித்து, அனைத்து தண்டனைகளையும் நிலைநிறுத்தியது.



