
கோலாலம்பூர், ஆகஸ்ட்-8 – இந்தியச் சிறு வணிகர்களின் திறனை மேம்படுத்துவதற்காக நிதி மற்றும் ஆலோசனைச் சேவைகளை வழங்கும் I-BAP திட்டத்துக்கு, அடுத்த பட்ஜெட்டில் 10 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும்.
கடந்தாண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு அமோக ஆதரவு கிடைத்திருப்பதால், நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் முனையும் என, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
அமைச்சு நிலையிலும், SME Corp-புடனும் மேற்கொண்டு விவாதித்த பிறகு 2026 வரவு செலவுத் திட்டத்தில் அப்பரிந்துரையை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
இவ்வேளையில் இவ்வாண்டு ஒதுக்கப்பட்ட 6 மில்லியன் ரிங்கிட்டில் இதுவரை 5.13 மில்லியன் ரிங்கிட் நிதி விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன; விரைவிலேயே உரியவர்களுக்கு அது சேர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.
எஞ்சிய 800,000 ரிங்கிட் பரிசீலனையில் உள்ளன.
வந்த புதிய விண்ணப்பங்கள் மட்டுமே 2 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்தியுள்ளன; இதனால் மொத்த விண்ணப்பங்களின் மதிப்பு 8 மில்லியன் ரிங்கிட்டை தாண்டியுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
அடுத்தாண்டு விண்ணப்பங்களின் மதிப்பு ஒருவேளை 14 அல்லது 15 மில்லியன் ரிங்கிட்டை எட்டும் பட்சத்தில், அதற்கடுத்த ஆண்டில் கூடுதலாக 20 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை கேட்போம் என்றும் ரமணன் சொன்னார்.
விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட I-BAP பெறுநர்கர்களுக்கு கோலாலம்பூரில் அதற்கான கடிதங்களை வழங்கிய நிகழ்வில் துணையமைச்சர் பேசினார்.
31 நிறுவனங்களுக்கு 7,000 ரிங்கிட் முதல் 100,000 ரிங்கிட் வரை அதில் மானியம் வழங்கப்பட்டது.