
Inspiring Billionaire: வர்த்தகத்தைத் தாண்டிய ஆனந்த கிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு பெட்டாலிங் ஜெயாவில் வெளியீடு
பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி-14,
மலேசியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் மறைந்த தான் ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணனின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் Inspiring Billionaire என்ற 300 பக்க வாழ்க்கை வரலாறு புத்தகம், பெட்டாலிங் ஜெயாவில் வெளியீடு கண்டுள்ளது.
இந்த நூலை லோட்டஸ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தான் ஸ்ரீ ரெனா. துரைசிங்கம் பிள்ளை வெளியிட்டார்.
வெளியீட்டு விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்; நிகழ்வில் சுமார் 200 பிரதிகள் விற்பனையாகின.
ஆனந்த கிருஷ்ணன் வணிக உலகைத் தாண்டி பல அறக்கட்டளைகளை நிறுவி, ஏழை மற்றும் தேவை ஏற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கியதை, நூலாசிரியர் எம். கிருஷ்ணமூர்த்தி, நூலில் கொண்டு வந்துள்ளார்.
14 வயதிலேயே, ‘கோலாலம்பூர் உயரமான கட்டடங்களால் நிரம்பும்’ என்ற அவரது கனவு, பின்னர் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம் மூலம் நனவானது.
இந்த வெளியீடு, ஆனந்த கிருஷ்ணனின் வணிக வெற்றியை மட்டுமல்லாமல், நாட்டின் அடையாளத்தை மாற்றிய அவரின் கனவுகளையும், கருணையையும் கொண்டாடுகிறது.
ஆஸ்ட்ரோ, மேக்சிஸ் உள்ளிட்ட பெருநிறுவனங்களின் அதிபதியாகவும் இருந்தவரான ஆனந்த கிருஷ்ணன், 2024 நவம்பர் 28-ஆம் தேதி காலமானார்.
இந்த Inspiring Billionaire புத்தகம் விரைவிலேயே புத்தகக் கடைகளிலும், இணையத்திலும் கிடைக்கும் என, மூத்த பத்திரிகையாளருமான கிருஷ்ணமூர்த்தி சொன்னார்.
மேல் விவரங்களுக்கு
012-652 4327 என்ற எண்களில்
அவரை தொடர்புக் கொள்ளலாம்.



