
மெர்சிங், செப்டம்பர்-17,
ஜோகூர், மெர்சிங், ஃபெல்டா தெங்காரோவில், Peroduza Alza கார் ஒன்றில், சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்ட புலியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், புக்கிட் அமான் சேமப் படை மற்றும் ஜோகூர் வனவிலங்கு பாதுகாப்புத்துறை இணைந்து நடத்திய சோதனையில், அந்த மலாயாப் புலியின் சடலம், கார் மற்றும் நான்கு கைப்பேசிகள் என மொத்தம் 3 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், பொறியில் சிக்கியதால் ஏற்பட்ட காயங்களாலும் தலை பகுதியில் 6 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததாலும் புலி உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து 28 முதல் 49 வயதுக்குட்பட்ட 3 ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டு, வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.
“மலாயாப் புலி தேசிய விலங்காகும்; இந்தத் தேசியச் செல்வத்தின் சட்டவிரோத வேட்டைக்கு இனி ஒருபோதும் இடமில்லை; கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என FRU கமாண்டோ SAC Rosli Md Yusof எச்சரித்தார்.
1950-களில் 3,000-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலிருந்த மலாயாப் புலிகளின் எண்ணிக்கை தற்போது மிகவும் கவலையளிக்கும் வகையில் 150-க்கும் குறைவாகவே உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.