
செப்பாங், மார்ச்-28-கடந்த சில மாதங்களில் குறைந்தது 8 இஸ்ரேல் நாட்டவர்கள் KLIA-வில் தற்காலிகமாகத் தடுத்து வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் மலேசியாவுக்கு வருகை தந்தவர்கள் அல்லது பிற ஆசியான் நாடுகளுக்குச் செல்லும் வழியில் இடைநிறுத்தமாக இறங்கியவர்கள் என, இஸ்ரேலிய ஊடகமான Ynet செய்தி வெளியிட்டுள்ளது.
சிலர் இரட்டை குடியுரிமை கொண்டவர்களாக இருந்தாலும், மற்றவர்கள் இஸ்ரேல் கடப்பிதழுடன் மட்டும் பயணம் செய்திருந்தனர்.
இதில் ருசிகரமான சம்பவமாக, இருவர், தாய்லாந்திலிருந்து மலேசியா வழியாகப் பிலிப்பின்ஸ் செல்வது பாதுகாப்பானதா என, chatGPT போன்ற ஒரு Chatbot செயலியிடம் கேட்டதாகவும், அது பாதுகாப்பானதே என கூறப்பட்டதை நம்பி மலேசியாவில் இறங்கியதாகவும் கூறினர்.
எனினும், பின்னர் வந்தவழியே தாய்லாந்துக்கே அவர்கள் திரும்பி விட்டனர்.
இன்னும் சில சம்பவங்களில், இந்த இஸ்ரேலியர்கள் 24 முதல் 48 மணி நேரம் வரை தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டதாக Ynet கூறிற்று.
அவர்களில் சிலரது விடுதலைக்காக சிங்கப்பூரில் உள்ள இஸ்ரேலியத் தூதரகம் தலையிட்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும், இந்த விவகாரம் குறித்து மலேசிய அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை.
மலேசியா – இஸ்ரேல் இடையே அரச தந்திர உறவுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



