
செப்பாங், மே-22-செப்பாங், KLIA விமான நிலையத்தில் 3 உள்ளூர் பயணிகளை வற்புறுத்தி, 109 ரிங்கிட் கட்டணத்திற்குத் தனது காரில் ஏற்ற முயன்ற சட்டவிரோதப் போக்குவரத்துத் தரகர் ஒருவரைச் சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ அதிகாரிகள் அதிரடியாகக் கைதுச் செய்துள்ளனர்.
சிலாங்கூர் மாநில JPJ அதிகாரிகள் KLIA முனையத்தில் மேற்கொண்ட இரகசியக் கண்காணிப்பு நடவடிக்கையின் போது இந்தச் சட்டவிரோதச் செயல் முறியடிக்கப்பட்டது.
அம்மூவரையும் KLIA Termilan 1 முனையத்திலிருந்து காஜாங், சுங்கை லோக் வரை ஏற்றிச் செல்ல 109 ரிங்கிட் கட்டணம் பேசியபோது அந்நபர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
சந்தேக நபர் பயன்படுத்திய Toyota Innova இரகக் கார், அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மீது நிலப் பொதுப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற குற்றங்களுக்கு, அதிகபட்சம் 50,000 ரிங்கிட் அபராதமும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
எனவே, பொது மக்கள் KLIA 1, KLIA 2 முனையங்களில் உள்ள அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை முகப்புகளிலோ அல்லது e-hailing செயலிகள் வாயிலாகவோ போக்குவரத்துச் சேவைகளை நாட வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



