
கோலாலாம்பூர், மே-22-பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெர்சாசத்து கட்சியுடனான தங்களின் அரசியல் உறவை பாஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக மறுபரிசீலனை செய்து வருகிறது.
இந்த அரசியல் அதிர்ச்சித் தகவலை அதன் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறியதாக, உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
மாறிவரும் அரசியல் சூழலுக்கு ஏற்ப, இந்த கூட்டணியின் எதிர்காலப் பலன்கள் குறித்து பாஸ் கட்சி ஆய்வு செய்து வருகிறது.
“அதற்காக நாங்கள் அதிருப்தியில் உள்ளோம் என்று அர்த்தமில்லை; ஆனால் எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு” என்றார் அவர்.
தொகுதிப் பங்கீடு, எதிர்க்கட்சித் தலைமைப் பதவி மற்றும் பெர்சாத்து கட்சியின் உட்பூசல்கள் போன்ற காரணங்களால் இரு கட்சிகளுக்கும் இடையே நிலவி வரும் பனிப்போரின் வெளிப்பாடாகவே இந்த அதிரடி நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
எதிர்கட்சிக் கூட்டணியில் பாஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களையும் பலமான அடிமட்டத் தொண்டர் பலத்தையும் கொண்டுள்ளதால், தங்களின் அரசியல் முக்கியத்துவத்தை நிலைநிறுத்த பாஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.
இந்த முடிவு தற்போதைக்குக் கூட்டணி முறிவைக் குறிக்காது என ஹாடி அவாங் கூறியபோதிலும், கட்சியின் சொந்தக் கொள்கைகளுக்கும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கும் மட்டுமே தங்களின் முதல் முன்னுரிமை இருக்கும் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாஸ் கட்சியின் இந்த மறுபரிசீலனை நடவடிக்கை, பெரிக்காத்தான் கூட்டணியில் ஒரு பெரிய அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பெர்சாத்துவை கழற்றி விடுவோம் என்று சொல்லாமல் சொல்லும் விதமாக, PEJUANG, BERJASA மற்றும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் முன்னெடுத்துள்ள Reset இயக்கத்துடன் பயணிப்பதே, பாஸ் கட்சியிக்கு இனி நல்லது என, அதன் பொருளாளர் Iskandar Abdul Samad, முன்னதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



