
கோத்தா பாரு, ஆகஸ்ட்.12-கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) மற்றும் KLIA2வில் கண்காணிப்பு கேமராக்களின் பார்வையில் இல்லாத பகுதிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அங்குள்ள CCTV அமைப்பு முறை மேம்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே சுமார் 5,000 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் இல்லாதிருப்பதை உறுதிப்படுத்தத் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
எனவே பார்வையில் படாத பகுதிகள் ஏதேனும் இருந்தால், அங்கு மேம்பாடுகள் செய்யப்படும் என அவர் கூறினார்.
இவ்வேளையில், பாதுகாப்பு அமைப்பு முறையைக் கண்காணிக்கப் பணியமர்த்தப்பட்டவர்கள், குறிப்பாகப் பயிற்சித் தரநிலைகள் மற்றும் திறன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
விமான நிலையப் பாதுகாப்பு குறித்து மாமன்னர் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட Saifuddin, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதன் தொடர்பில் மாமன்னரிடம் விளக்கமளித்துள்ளதாகத் தெரிவித்தார். இது பாதுகாப்பு மட்டுமல்ல. நாட்டின் நற்பெயரையும் உள்ளடக்கியிருக்கிறது என்றாரவர்.
அண்மையில் கோலாலம்பூரிலிருந்து இந்தோனேசியா சென்றடைந்த விமானத்தில் அதிக அளவு போதைப்பொருட்களை வைத்திருந்த மலேசிய விமானி ஒருவர் தடுத்து வைக்கப்பட்டார்.
அச்சம்பவம் மலேசிய விமான நிலையங்களில் உள்ள பாதுகாப்புச் சோதனைகளின் தரம் குறித்து கேள்விகளை எழுப்பியது. அதோடு, மலேசியா ஏவியேஷன் குழுமம் தனது விமானிகளுக்கான போதைப்பொருள் பரிசோதனை நடைமுறைகளைக் கடுமையாக்கவும் உந்தியது.



