Latestமலேசியா

KLIAவில் நெரிசலைத் தவிர்க்க வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான இடைக்கால தங்குமிடம் – மனிதவள அமைச்சு நடவடிக்கை

கோலாலம்பூர், ஜூலை 6 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கே.எல்.ஐ.ஏ) நிலவும் நெரிசலைக் குறைக்கவும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருகையை முறைப்படுத்தவும் பிரத்யேக இடைக்கால தங்குமிடம் (Transit Center) ஒன்றை உருவாக்க மனிதவள அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

நேற்று மதியம் எச்.ஆர்.டி.கார்ப் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், அமைச்சரவை இந்தத் திட்டத்திற்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழைந்ததும், அவர்களின் முதலாளிகள் அவர்களை அழைத்துச் செல்லும் வரை இந்த மையத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்படுவார்கள்.

இதன் மூலம், ஊழியர்கள் தவறான முதலாளிகளிடம் செல்வது அல்லது அவர்கள் தன்னிச்சையாக அலைவதைத் தடுத்து, தேசிய பாதுகாப்பு மற்றும் அமலாக்கப் பணிகளை வலுப்படுத்த முடியும் என்று அவர் விளக்கினார்.

இந்த இடைக்கால தங்குமிடம் 1,000 முதல் 2,000 ஊழியர்களை ஒரே நேரத்தில் தாங்கும் திறன் கொண்டதாக இருக்கும். இது ஒரு நிரந்தரத் தங்குமிடமோ அல்லது தடுப்பு மையமோ அல்ல, மாறாக ஒரு பரிமாற்ற மையமாக மட்டுமே செயல்படும் என்று ரமணன் தெளிவுபடுத்தினார்.

ஆவணங்கள் அனைத்தும் முறையாகவும், முதலாளிகளுடனான நடைமுறைகள் தெளிவாகவும் இருந்தால், ஊழியர்கள் விரைவாக இங்கிருந்து வெளியேறிச் செல்ல முடியும்.

ஒருவேளை ஆவணங்களில் சிக்கல் இருந்தால் மட்டுமே, அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை ஊழியர்கள் அங்குத் தங்க வைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

தற்போதைய நிலையில், இந்த மையம் அமையவிருக்கும் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்யும் பணிகளில் மனிதவள அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

அதே வேளையில், சட்டத்திற்குப் புறம்பான தங்குமிடங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை தங்க வைக்கும் முதலாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!