
‘Kuil haram’ பேரணி இன, மத பதற்றத்தை அதிகரிக்கும்; G25 எச்சரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி-7,
இன்று இரவு நடைபெற திட்டமிடப்பட்டுள்ள “சட்டவிரோத” வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான பேரணி குறித்து, மிதமான மத உரையாடல், சட்டத்தின் ஆட்சி, சமூக ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தும் G25 மலேசியா அமைப்பு கடும் கவலை தெரிவித்துள்ளது.
அமைதிப் பேரணிகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் சுதந்திரத்தை G25 ஆதரிக்கிறது.
ஆனால் தீவிரமான பேச்சுகள் இன, மத உணர்வுகளை தூண்டி நாட்டின் ஒற்றுமையை பாதிக்கக்கூடும் பேரணிகளை ஆதரிக்க முடியாது என, இன்று வெளியிட்ட அறிக்கையில் அது திட்டவட்டமாகக் கூறியது.
_“சட்டவிரோத கோவில்கள்”_ என்ற முத்திரை, வரலாறு, நில உரிமை, அரசு நிர்வாகம் போன்ற சிக்கலான அம்சங்களை புறக்கணிப்பதை G25 சுட்டிக் காட்டியது.
எனவே, அதிகாரிகள் பாதுகாப்பை உறுதிச் செய்ய முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளை அனுமதிக்கக் கூடாது என்றும் அது வலியுறுத்தியது.
பொது அமைப்புகள், அரசியல்வாதிகள், பொது மக்கள், பேரணி ஏற்பாட்டாளர்கள் என அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
மலேசியாவின் பன்முகக் கலாச்சாரமே அதன் வலிமையாகும்… எனவே அதை மதிப்புடன் பேண வேண்டும் எனவும் G25 வலியுறுத்தியது.
சர்ச்சைக்குரிய சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் தலைமையில் 141 அரசு சார்பற்ற அமைப்புகள் கோலாலம்பூர் SOGO பேரங்காடி வளாகத்தில் இன்றிரவு அப்பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
போலீஸார் பெர்மிட் விண்ணப்பதை நிராகரித்து, பேரணிக்குத் தடை விதித்துள்ள போதும், அதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என சாம்ரி வினோத் கூறியுள்ளார்.



