
புத்ராஜெயா, ஜூலை-31-MITAP எனப்படும் மலேசிய இந்தியர் உருமாற்ற விவசாய திட்டத்தின் கீழ், இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த 70 பங்கேற்பாளர்கள் பயனடையவுள்ளனர்.
அவர்களுக்கு 30,000 ரிங்கிட் வரை விவசாய உருமாற்ற மானியம் கிடைக்குமென, மித்ரா தலைவர் பி.பிரபாகரன் தெரிவித்தார்.
MARDI கழகத்துடன் இணைந்து மித்ரா ஏற்பாடு செய்துள்ள இத்திட்டம், நவீன விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்தும் துறைகளில் இந்தியத் தொழில்முனைவோரின் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் என்றார் அவர்.
B40, M40 குடும்பங்களைச் சேர்ந்த இந்திய விவசாயத் தொழில்முனைவோர்களுக்கு 2 திட்டங்கள் வாயிலாக சிறந்த விவசாயச் சூழலை ஏற்படுத்தித் தருவதை இது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விவசாயத் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் மானியங்களை உட்படுத்திய QuickWira MITRA திட்டம் மற்றும் இளம் விவசாயத் தொழில்முனைவோர் திட்டம் (Program Usahawan Tani Muda) ஆகியவையே அவ்விரு திட்டங்களாகும்.
MITRA MITAP திட்டத்திற்கு 250-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதில், நேற்று தொடங்கிய BMC எனும் வணிக மாதிரி கேன்வஸ் கருத்தரங்கில் கலந்துகொள்ள 148 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த BMC-யானது, ஒரு நிலையான வணிகத்தை உருவாக்குவதில் ஒரு அடிப்படை தொகுதியாகும்.
“BMC மூலம், ஒவ்வொரு பங்கேற்பாளரையும் அவர்களின் திட்டப் பரிந்துரை ஆவணம் மற்றும் உருவாக்கப்பட வேண்டிய திட்டத்தின் ஆற்றலின் அடிப்படையில் மதிப்பிடுவோம்” என்றார் அவர்.
MardiCorp Academy-யில் அக்கருத்தரங்கைத் தொடக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பிரபாகரன் கூறினார்.
இந்த 2-நாள் கருத்தரங்கு, பங்கேற்பாளர்கள் தங்கள் போட்டித்தன்மையை மேம்படுத்தவும், தொழில்முனைவோர் திறன்களை வலுப்படுத்தவும், தங்கள் வணிகத் தொடர்புகளை விரிவுபடுத்தவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கருத்தரங்கில் பங்கேற்றவர்களில் சிலர் வணக்கம் மலேசியாவுடன் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
இவ்வேளையில், ஆகஸ்டில் தொடங்கும் Program Ushawan Tani Muda திட்டம் 26 பங்கேற்பாளர்களை இலக்கு வைத்துள்ளது.
அவர்களுக்கு 10-மாத பயிற்சியும், 3-ஆம் தர மலேசியத் திறன் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
அதோடு, உணவு உற்பத்திக்காக ஜோகூர் மற்றும் சிலாங்கூரில் 6 மாதங்களுக்கு தலா 1 ஏக்கர் நிலம் வாடகைக்கு கொடுக்கப்படும் என்றும் பிரபாகரன் சொன்னார்.