
ஆண்டு 4, படிவம் 3 கற்றல் மாட்ரிக்ஸ்: பள்ளி தரவரிசை முறை இல்லை – கல்வி அமைச்சர் உறுதி
கோலாலம்பூர், பிப்ரவரி 24 –
ஆண்டு 4 மற்றும் படிவம் 3 மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள “கற்றல் மாட்ரிக்ஸ்” திட்டம் பள்ளிகளை தரவரிசைப்படுத்த அல்லது மாணவர்களுக்கு ரேங்க் அதாவது புள்ளிகளின் அடிப்படையில் அவர்களை வரிசைப்படுத்துவதற்காக அல்ல என்று கல்வி அமைச்சர் பட்லீனா சிடேக் (Fadhlina Sidek) கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், இந்த புதிய மதிப்பீட்டு முறை மாணவர்களின் திறனை ஆரம்பத்திலேயே அறிந்து, அவர்களுக்கு தேவையான கல்வி உதவிகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதனால் மாணவர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு தேவையற்ற அழுத்தம் ஏற்படாது என்றும் உறுதி அளித்தார்.இந்த மதிப்பீடு முழுமையாக தேர்வுகள் வாரியம் (LP) மூலம் நடத்தப்படும். கேள்வித்தாள்கள், மதிப்பீட்டு வழிகாட்டிகள் மற்றும் முடிவுச் சீட்டுகள் அனைத்தும் மையமாக தயாரிக்கப்படும்.
அதே நேரத்தில் ஆசிரியர்கள் தனியாக தேர்வுகளை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.ஆண்டு 4 மாணவர்களுக்கு மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் இடம்பெறும் எனவும் சீன மற்றும் தமிழ் பள்ளிகளில் தாய்மொழி பாடங்களும் சேர்க்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆண்டு 4 கற்றல் மாட்ரிக்ஸ் 2026 அக்டோபரில் தொடங்கவுள்ள நிலையில் படிவம் 3க்கு அத்திட்டம் 2027ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
மாணவர்களின் வாசிப்பு திறன், எண்ணறிவு மற்றும் அறிவியல் திறனை மேம்படுத்தவும், அவர்களை சர்வதேச மதிப்பீடுகளுக்கு தயார்படுத்தவும் இந்த திட்டம் உதவும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும், UPSR மற்றும் PT3 தேர்வுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படாது என்றும் அவர் கூறினார்.



