
கோலாலம்பூர், ஜூலை-4 – மலேசிய இந்தியர்கள், OCI எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளை மேலும் எளிதாக்க, இந்திய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விண்ணப்பத்தாரர்களுக்கு, பல்வேறு ஆவணங்களின் தேவை இன்னமும் ஒரு சவாலாக இருப்பதால், அந்நடவடிக்கை அவசியமாகிறது.
மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என்.ரெட்டி அதனைத் தெரிவித்தார்.
OCI குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள், மூன்றாம் தலைமுறை வரையிலான தங்களின் இந்திய பூர்வீகம் குறித்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
ஆனால், புலம்பெயர்ந்த காரணத்தாலோ அல்லது ஆவணங்கள் தொலைந்துபோனதாலோ, பலர் அதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
குறிப்பாக பிரிட்டிஷ் ஆட்சியின் போது இங்கு புலம்பெயர்ந்தவர்களிடம் அப்பதிவுகள் இல்லை; மேலும் பலரின் ஆவணங்கள் உலகப் போரின் போது காணாமல் போய்விட்டன.
எனவே, மலேசிய அரசாங்கம் வெளியிட்ட அல்லது பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் வெளியிடப்பட்ட ஆவணங்களையும், OIC விண்ணப்பங்களுக்கான ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன், இங்குள்ள இந்தித் தூததரம் பேசி வருவதாக பி.என்.ரெட்டி கூறினார்.
விண்ணப்பத்தாரர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தான் என்பதை நிரூபிக்க ஏதாவதோர் ஆவணம் இருந்தாலே, OIC அங்கீகாரம் வழங்கும் அளவுக்கு நடைமுறைகளை எளிதாக்க விரும்புவதாக அவர் சொன்னார்.
2 மில்லியனுக்கும் மேற்பட்ட மலேசிய இந்தியர்களில், தற்போது வரை சுமார் 100,000 பேர் OCI அட்டையை வைத்துள்ளனர்.
OCI என்பது வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு வழங்கப்படும் ஒரு வகை குடியுரிமையாகும்.
ஆனால் இது இந்தியக் குடியுரிமை அல்ல.
மாறாக இந்தியாவுக்குள் பல சலுகைகளையும் உரிமைகளையும் வழங்கும் அட்டையாகும்.
விசா இல்லாமல் சுற்றுலா மேற்கொள்வது, சொத்துக்களை வாங்கி போடுவது உள்ளிட்டவையும் அவற்றிலடங்கும்.