
PHன் தேர்தல் அறிக்கையின் தோல்வியே கோயில் சர்ச்சைக்குக் காரணம்; MIPP குற்றச்சாட்டு
கோலாலாம்பூர், பிப்ரவரி-11,
பக்காத்தான் ஹராப்பானின் Buku Harapan தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதே, கோயில் நில சர்ச்சைக்கு காரணம் என, மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP குற்றம் சாட்டியுள்ளது.
மாநில அளவில் இந்து அறப்பணி வாரியங்கள் அமைப்பதையும், கோயில்கள் மற்றும் சுடுகாடுகளுக்குத் தேவையான நிலம் வழங்குவதையும் PH அதன் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருந்ததை, MIPP தலைவர் பி. புனிதன் சுட்டிக் காட்டினார்.
ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்றைய பதற்றமான சூழ்நிலை உருவாகியிருக்காது என்றார் அவர்.
இந்நிலையில், கோயில்களுக்கு அனுமதி இல்லாதது சமூகத்தின் தவறல்ல; அது பதவியில் உள்ள அரசாங்கத்தின் கொள்கைத் தோல்வி மற்றும் நிர்வாக பலவீனம் என புனிதன் கூறினார்.
இவ்வேளையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அனுமதியில்லாத கோயில்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதும், இந்து பக்தர்களிடையே ஆழ்ந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக புனிதன் கூறிக் கொண்டார்.
எனவே, சமூகத்தை குற்றம் சாட்டுவதை நிறுத்தி விட்டு, தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப வழிபாட்டுத் தலங்களை நியாயமாக, ஒழுங்குமுறையோடு சட்டப்பூர்வமாக்குவதை மடானி அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென புனிதன் வலியுறுத்தினார்.



