
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 19 – தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் (PTPTN) கடன்களை திருப்பிச் செலுத்தும் ஆற்றல் இருந்தும் அவற்றைச் செலுத்த மறுக்கும் கடன் வாங்குபவர்களுக்கு எதிராக பயணக் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இருப்பினும் இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என உயர்கல்வி துணை அமைச்சர் Datuk Mustapha Sakmud தெரிவித்தார்.
மேலும், முதல் வகுப்பு இளங்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கு PTPTN கடன் திருப்பிச் செலுத்தலில் விலக்கு அளிக்கும் திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது என்ற கேள்வி மக்களவையில் எழுப்பப்பட்ட போது அதற்கு முஸ்தபா, PTPTN வலைத்தளம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், விலக்கு விண்ணப்பங்கள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுவதாகவும் கூறினார்.
அவரது கூற்றுப்படி, 2001 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விலக்கு திட்டத்தின் பயன் இதுவரை 133,159 கடன் வாங்குபவர்களுக்கு கிடைத்துள்ளது என்றும் இதன் மொத்த மதிப்பு 2.9 பில்லியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.