
RM100 SARA உதவி திட்டம் நாளை தொடக்கம்; “இந்த முறை அனைத்தும் தயார்” – ஃபாஹ்மி உத்தரவாதம்
கோலாலாம்பூர், பிப்ரவரி-8,
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களும், MyKad அட்டை வாயிலாக அத்தியாவசியப் பொருட்களை வாங்க வகை செய்யும் RM100 SARA உதவி திட்டம் நாளை தொடங்குகிறது.
மலேசியர்களுக்கு நன்றி கூறும் விதமாக அரசாங்கம் இரண்டாவது முறையாக இந்த உதவியை வழங்குகிறது.
கடந்தாண்டு முதன் முறையாக இது வழங்கப்பட்ட போது, தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஏராளமான புகார்கள் கிடைக்கப் பெற்றன.
அவற்றைக் கருத்தில் கொண்டு இம்முறை அனைத்தும் சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்வதற்குண்டான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
SARA உதவிப் பெறுநரை நிர்வகிக்கும் MyKasih தரவுத் தளம் உட்பட டிஜிட்டல் தளங்களின் ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதால், இம்முறை தாமதம் ஏற்படாது…
முந்தைய அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் இந்த முறை திட்டத்தை மேலும் எளிதாக்கும் என, ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளருமான அவர் சொன்னார்.
குறைந்த வருமானக் குடும்பங்களின் சுமையை குறைக்கும் நோக்கில், அந்தந்த தகுதிப் பிரிவுக்கு ஏற்ப மாதந்தோறும் SARA உதவி வழங்கப்படும் நிலையில், மலேசியர்களுக்கு நன்றி கூறும் விதமாக one-off முறையில் இந்த RM100 உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.



