
பங்கோர், மார்ச்-1-பேராக்கில், பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த பங்கோர் புதியத் தமிழ்ப்பள்ளி கட்டுமானப் பணி, தற்போது மத்திய அரசாங்கத்தின் RM14.2 மில்லியன் மானியத்தின் மூலம் தொடங்கப்படுகிறது.
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ A. சிவநேசன் அதனை அறிவித்தார்.
இன்று பள்ளிக்கு வருகை தந்த அவர், நிர்வாகத்தினரை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கடந்த காலங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் பணிகள் தாமதமான நிலையில், தற்போது நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளது.

எனவே, கட்டுமானம் வரும் மே மாதம் தொடங்கி 2027 இறுதியில் நிறைவடையும் என அவர் தெரிவித்தார்.
கட்டுமானப் பணிகள் குறித்து, பொதுப் பணித் துறையான JKR ஒவ்வொரு மாதம் அறிக்கைத் தர வேண்டுமென்றும் அவர் சொன்னார்.
இன்றைய இந்த வருகையில் சிவனேசனுடன் சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை துணையமைச்சர் எம். குலசேகரனும் வந்திருந்தார்.
பின்னர் பங்கோர் பத்திரகாளியம்மன் ஆலய மாசமக திருவிழாவில் கலந்து கொண்ட சிவநேசன், ஆலயத்திற்கு RM40,000 மானியத்தை அறிவித்தார்.
இதனிடையே, பேராக்கில் அரசாங்க நிலங்களில் உள்ள 42 ஆலயங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதை குறிப்பிட்ட அவர், அவற்றுக்கு சுமுகமான தீர்வு காணப்படும் என்றும், உரிய அனுமதி இன்றி ஆலயங்கள் இடிக்கப்படமாட்டாது என்றும் உறுதியளித்தார்.
ஆலய விவகாரங்களைத் தீர்க்க, மாநில அரசு நியமித்துள்ள சிறப்பு குழு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அவர் சொன்னார்.



