
புத்ராஜெயா, மார்ச்-1 – அந்நியத் தொழிலாளர் முகவரிடம் லஞ்சம் வாங்கிய சந்தேகத்தில், மலேசியா கினி செய்தியாளர் ஒருவர் நேற்றிரவு கைதாகியிருப்பத்காக மலேசியா கினி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், வெளிநாட்டுத் தொழிலாளர்களை மலேசியாவுக்குக் கடத்தி வரும் மோசடி கும்பலை அம்பலப்படுத்தி, மலேசியா கினி அண்மையில் கட்டுரை வெளியிட்டதே அந்த செய்தியாளரின் கைதுக்குக் காரணம் எனக் கூறப்படுவதை அசாம் பாக்கி மறுத்திருக்கின்றார்.
மாறாக, அம்சோசடி கும்பல் தொடர்பில் 2 கட்டுரைகளை வெளியிடாமல் இருப்பதற்காக, சம்பந்தப்பட்ட முகவரிடமிருந்து 100,000 ரிங்கிட் பேரம் பேசியதே அச்செய்தியாளரின் கைதுக்குக் காரணம்.
100,000 ரிங்கிட்டில் ஆரம்பித்த பேரம் கடைசியில் 20,000 ரிங்கிட்டில் முடிந்து பணம் கைமாறியதாக அசாம் பாக்கி கூறினார்.
அந்த முகவர் பேரம் பேசுவது போல் பேசி, அந்த செய்தியாளரை MACC-யிடம் சிக்க வைக்க அது குறித்து புகாரளித்தும் விட்டார்.
இந்நிலையில், ஷா ஆலாம் Concord ஹோட்டலில் அச்செய்தியாளரிடம் பணம் நேரில் ஒப்படைக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் தயாராக காத்திருந்த MACC அதிகாரிகள் 20,000 ரிங்கிட் ரொக்கத்துடன் அவரைக் கையும் களவுமாகப் பிடித்ததாக அசாம் பாக்கி தெரிவித்தார்.
இதையடுத்து அவர் 4 நாட்களுக்கு விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வேளையில் அந்த செய்தியாளதின் கைது குறித்து அதிர்ச்சித் தெரிவித்த மலேசியா கினி நிர்வாகம், MACC-க்கு முழு ஒத்துழைப்பு வழங்க உறுதியளித்துள்ளது.
பணியாளர்களின் தவறான நடத்தைக்கு அனுசரணைக் காட்ட மாட்டோம் என தெளிவுப்படுத்திய அதன் நிர்வாக ஆசிரியர் ஆ.கே.ஆனந்த், முழு தகவல் கிடைத்ததும் அறிக்கை வெளியிடப்படும் என கூறியுள்ளார்.