
கோலாலம்பூர், பிப்ரவரி-26-கடந்தாண்டு கூடுதலாகச் செலுத்தப்பட்டவற்றில், RM22.45 பில்லியன் வரித் தொகை வரி செலுத்துநர்களிடம் திருப்பித் தரப்பட்டுள்ளது.
இது கடந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மிக உயர்ந்த தொகையாகும் என நிதியமைச்சு மக்களவையில் கூறியது.
2023 முதல் 2025 வரை மொத்தம் RM56 பில்லியன் வரி திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
இது 2020 முதல் 2022 வரை வழங்கப்பட்ட RM37 பில்லியனை விட சுமார் 50 விழுக்காடு அதிகமாகும்.
கடந்த டிசம்பரில் மட்டும் RM7.5 பில்லியன் திருப்பித் தரப்பட்டு, அரசாங்கத்தின் RM4 பில்லியன் இலக்கு மீறியுள்ளது.
இவ்வேளையில், 2022 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கான அனைத்து தகுதியான கூடுதல் வரித் தொகைகளும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறிற்று.
இவ்வாண்டு பிப்ரவரி 16 வரையிலான நிலவரப்படி, 95,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு RM6.2 பில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2023-ஆம் ஆண்டுக்கான கூடுதல் வரித் தொகைகளைத் திருப்தித் தரும் பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024-ஆம் ஆண்டுக்கான வரித் தொகைகள் இவ்வாண்டு இறுதிக்குள் வழங்கப்படும்.
இந்நடவடிக்கைகள், வரி செலுத்துநர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தவும் உதவும் என்று நிதியமைச்சு நம்பிக்கைத் தெரிவித்தது.



