
ஷா ஆலாம், ஏப்ரல்-22-230 மில்லியன் ரிங்கிட் Zakat நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதாக் கூறி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மேற்கொண்டு வரும் விசாரணையுடன் தங்களுக்கு எந்தத் தொடர்புமில்லை என, சிலாங்கூர் Zakat வாரியம் தெளிவுப்படுத்தியுள்ளது.
அந்த முறைகேடு குற்றச்சாட்டு ஏதோ ஒரு அரசு சாரா இயக்கத்துடன் தொடர்புடையது; அதற்கும் Zakat Selangor வாரியத்திற்கும் சம்பந்தமில்லை என, அதன் தலைமை செயலதிகாரி Mohd Khaidzir Shahari கூறினார்.
விசாரணை நடைபெற்று வருவதால் இது குறித்து மேலும் கருத்துரைக்க விரும்பவில்லை என்றார் அவர்.
Zakat Selangor வாரியமானது, சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் நேரடிப் பார்வையின் கீழ் இயங்கும் அதிகாரப்பூர்வ Zakat அமைப்பாகும்; இது வெளிப்படைத்தன்மையுடனும், கடுமையான தணிக்கை முறையுடனும் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, எந்தவொரு Zakat நிதி முறைகேடுகளுக்கும் இடமில்லை என்றார் அவர்.
230 மில்லியன் Zakat நிதியை கையாடல் செய்த சந்தேகத்தில், அரசு சார்பற்ற அமைப்பின் துணைத் தலைவரும், 2 நிறுவன இயக்குநர்களும் MACC-யால் முன்னதாகக் கைதுச் செய்யப்பட்டனர்.
பொது மக்கள் கொடுத்த அந்த நன்கொடையை, சம்பந்தப்பட்ட துணைத் தலைவர் தனது சொந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு மாற்றி , சுய முதலீட்டுக்கும் தனிப்பட்ட பயன்பாட்டுக்கும் உபயோகித்ததாகக் கூறப்படுகிறது.



