
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-21 – RON95 பெட்ரோல் மானியங்களை அனுபவிப்பதற்கான தகுதியை தீர்மானிப்பதில், ஒருவரின் சொத்து மற்றும் சொகுசு வாகனங்களின் உரிமையும், மாத வருமானமும் கருத்தில் கொள்ளப்படலாம் என, நிதியமைச்சரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
LHDN எனப்படும் உள்நாட்டு வருவாய் வாரியத்தின் வருமான பதிவுகள் மற்றும் மலேசிய புள்ளிவிவரத் துறை நடத்திய வீட்டு வருமான கணக்கெடுப்பின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவு ஆதாரங்களைப் பயன்படுத்தி, அத்தகுதி மதிப்பிடப்படும் என்றார் அவர்.
உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி வழங்குவதில் இது மிகவும் விரிவான அணுகுமுறையை உறுதிச் செய்கிறது.
செப்டம்பர் இறுதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என, மக்களவையில் வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் அன்வார் தெரிவித்தார்.
RON95 மானிய மறுசீரமைப்பு எப்போது செயல்படுத்தப்படும், என்னென்ன வழிமுறை செயல்படுத்தப்படுமென எதிர் கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கேட்ட கேள்விக்கு பிரதமர் பதிலளித்தார்.
எது எப்படி இருப்பினும், 85 விழுக்காட்டு மலேசியர்கள் இந்த மானிய மறுசீரமைப்பால் நேரடியாகப் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் உறுதியளித்தார்.
மலேசியக் குடியுரிமை அல்லாதவர்களும் உண்மையிலேயே வசதி படைத்தவர்களும் மட்டுமே மானியத்தைப் பெறுவதிலிருந்து விலக்கப்படுவார்கள் என்பதை அவர் வலியுறுத்தினார்.
2025-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் RON95 பெட்ரோல் மானிய இலக்கை செயல்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக அன்வார் சொன்னார்.