
கோலாலாம்பூர், ஜூலை-30- SOSMA எனப்படும் 2012 பாதுகாப்புக் குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கைகள் சட்டம் மீதான மறுஆய்வு கடைசிக் கட்டத்தில் உள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் விரைவிலேயே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென, உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பாகான் (Bagan) நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங்கின் கேள்விக்கு மக்களவையில் எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில், அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் (Datuk Seri Saifuddin Nasution Ismail) அவ்வாறு கூறினார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கும் மலேசியாவின் அனைத்துலக மனித உரிமைக் கடமைக்கும் இணங்க, சர்ச்சைக்குரிய அச்சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள குற்றங்களில் 73 குற்றங்கள் ஆராயப்படுகின்றன.
SOSMA சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்படுவோரை ஜாமீனில் எடுக்கவே முடியாது என்ற சட்டப்பிரிவை நீக்கி விட்டு, அந்த அதிகாரத்தை நீதிமன்றத்திடமே திருப்பி ஒப்படைக்கவும் பரிசீலிக்கப்படுகிறது.
இந்த மறுஆய்வு, போலீஸ், சட்டத் துறைத் தலைவர் அலுவலகம், SUHAKAM எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையம், நீதித்துறை, அரசு சார்பற்ற அமைப்புகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் போன்ற தரப்புகளுடனான கலந்தாய்வை உட்படுத்தியுள்ளது.
ஒரு விரிவான மற்றும் சமநிலையான முடிவு எட்டப்படுவதை உறுதிச் செய்யும் வகையில், கலந்தாய்வுகள் தொடருவதாக சைஃபுடின் சொன்னார்.