Sprint நெடுஞ்சாலை பயங்கரம்: கார்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய நபருக்கு 26 மாத சிறைத்தண்டனை

கோலாலம்பூர், ஜூன்-4-Sprint நெடுஞ்சாலையில் கார்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 50 வயது மதிக்கத்தக்க நபருக்கு 26 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் காலை டாமான்சாரா லிங்க், Jalan Setiapuspa வெளியேற்றம் அருகே இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
ஆடம்பர மஸராட்டி (Maserati) கார் உட்பட பல வாகனங்கள் இந்த தாக்குதலுக்கு உள்ளாகின.
இந்தச் சம்பவத்தில் தங்களது வாகனங்கள் பலத்த சேதமடைந்ததாகக் கூறி 6 வாகனமோட்டிகள் புகார் அளித்துள்ளதாக பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் கூறியது.
இதனால் ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பு 20,000 ரிங்கிட்டுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கார் கண்ணாடி உடைந்ததில் ஓர் ஓட்டுநருக்குக் காயம் ஏற்பட்டு, மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலேயே அந்தச் சந்தேக நபர் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து கற்கள் நிரம்பிய இடுப்புப் பை மற்றும் மாற்றியமைக்கப்பட்ட கத்தரிக்கோல் ஜோடி பறிமுதல் செய்யப்பட்டன.
ஏற்கனவே 8 குற்றப் பின்னணிகள் மற்றும் ஒரு போதைப்பொருள் வழக்கைக் கொண்டுள்ள அவ்வாடவர், குற்றவியல் சட்டத்தின் கீழ் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு 26 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் கைதுச் செய்யப்பட்ட தேதியிலிருந்து இந்த தண்டனைக்காலம் தொடங்குகிறது.



